– தமிழக மீனவர்களிடையே திருவாளியன் சுறா என்ற சுறா அதிர்ஷ்டச் சுறாவாகக் கருதப்படுகிறது. கட்டுமரத்தின் முன்பகுதியில் இதைக் கட்டித் தொங்கவிட்டால் அதிர்ஷ்டம் வரும் என்பது பாரம்பரிய நம்பிக்கை.
– வெள்ளுடும்பன் என்றொரு கடல் மீன் வகை உண்டு. இதன் முட்டையை கத்தியால்கூட வெட்ட முடியாது.
– குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு பால் நன்கு சுரக்க மஞ்சள் சுறா என்ற மீனை சாப்பிடக் கொடுப்பது வழக்கம்.
– உழுவை என்ற மீன் இனத்துக்கு முக்கோண வடிவக் கொம்பு உண்டு.
– தவிட்டு உலுக்கு என்றொரு மீன் உண்டு. இதில் குட்டி உலுக்கு மீன்கள் (Electric Ray) அதிக மின்அதிர்வைக் கொடுக்கக்கூடியவை.
– நாய் அடல் என்றொரு மீன் வகை. இதற்கு நாயைப் போல பல் உண்டு, அதுவும் இரண்டு அடுக்குகள்.
– பாம்பைப் போன்ற தோற்றத்தில் அரணை என்றொரு கடல் மீன் இருக்கிறது. இது சாப்பிடப் பயன்படுவதில்லை.
– அப்புக் காரல் என்றொரு மீன் வகை உண்டு. வலையில் அதிகம் சிக்குவதால்தான் (அப்புவதால்), இதற்கு இந்தப் பெயர்.
– கண்ணாடிக் காரல் என்றொரு மீன் வகை, இதன் உடல் பளபளவென பாதரசம் பூசியது போல மின்னும்.
– முள்ளுக் கிளாத்தி என்றொரு மீன் வகைக்கு, மூன்று முட்கள் உண்டு. இதன் உடல் பிசின் போல ஒட்டும்.
– குழாய் மீன் என்றொரு மீன். இது ஸ்டிரா போன்ற தன் வாயால் இரையை உறிஞ்சி உண்ணும்.
– கொடுவா மீனின் கண்கள் பூனைக்கண்ணைப் போல ஒளிரும்.
– நெற்றியில் கொண்டை போன்ற புடைப்பைக் கொண்ட மீன் கொண்டைச் செப்பிலி.
– சேரி என்ற மஞ்சள் நிற மீனின் உடலில் அணிலைப் போன்ற கோடுகள் உண்டு.
– எத்தனை கருவாடு வகைகள் கடற்கரை மணலில் காய வைக்கப்பட்டிருந்தாலும், தோட்டா என்ற மீன் வகையின் கருவாட்டை காகம் குறி பார்த்து தூக்கிச் செல்லும். முள் நிறைந்த இந்த தோட்டா கருவாட்டில், சுவையான வயிற்றுப் பகுதியை மட்டும் தின்றுவிட்டு, எஞ்சியதை அது போட்டுவிடும்.
– நெய்த்தோலி என்ற மீன் வகையின் பெயரே நெத்திலி ஆகிவிட்டது.
– நொன்னா என்பது சிறிய வெள்ளை நிறப் பொடி மீன். கையில் தடவித்தான் இவற்றை எடுக்க முடியும்.
– ஈட்டிச் சங்கு என்ற சங்கு வகையின் ஈட்டி போன்ற முனையில் நஞ்சு இருக்கும். குத்தினால் பெரும் ஆபத்து.
– ஜெல்லி மீன் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் உயிரினத்துக்கு, மீனவர்கள் வைத்த பெயர் சொரி.
– இதில் கூரமாச் சொரி இனம் புள்ளிகள் கொண்டது. இது மேலே பட்டால் தீப்பிடித்தது போல எரியுமாம்.
- தொகுப்பு: மோகன ரூபன்
நன்றி: பத்திரிகையாளர் மோகன ரூபன் தொகுத்த ‘பன் மீன் கூட்டம்’.
Leave a Reply