அறிமுகம்
உலக உயிரினங்களில் மனதிற்கு மகிழ்ச்சியளிப்பவை பறவைகள். பலவித குரலொலிகள், அளவுகள், நிறங்களில் காணப்படும் பறவைகளின் கூடமைப்பும், வாழ்வியல் முறைகளும் சூழலுக்குத்தக்கபடி படிநிலையில் மலர்ச்சியடைந்துள்ளன. வலசைப் பறவைகள், வாழிட பறவைகள், வாழ்நாளில் பெரும்பகுதியை மரங்களில் கழிப்பவை, தரையிலேயே வாழ்நாளை கழிப்பவை, பறப்பவை, பறக்க இயலாதவை என பலப்பல வகைகளில் காணப்படுகின்றன. நீரைச் சார்ந்து வாழும் ‘நீர்வாழ்ப் பறவைகள்’ சூழலுக்கும், மனித சமூகத்திற்கும் அணுக்கமாக செயல்படுகின்றன.
பறவைகள்
ஒரு செல் உயிரிலிருந்து உருவெடுத்த உயிரின பரிணாமம், நீர்வாழ் உயிரிகள், இருவாழ்விகள், ஊர்வன என்ற போக்கில் அமைந்தன. ஊர்வனவற்றில் இருந்து பறவைகளும், மற்றொரு பிரிவு பாலூட்டிகளாகவும் படிநிலையில் மலர்ச்சி அடைந்தன. பாலூட்டிகளில் இருந்து இன்றைய நவீன மனிதனின் மூதாதை தோன்றி சுமார் 30 இலட்சம் ஆண்டுகள் கடந்திருக்கின்றன.
1861-இல் தெற்கு செர்மனியில் கண்டெடுக்கப்பட்ட தொல்படிவமான, ‘ஆர்க்கியாப்டிரிக்ஸ்’ என்ற தொல்பறவை தான் பறவைகளின் மூதாதையாக கருதப்படுகிறது. (ஆர்க்கியாப்டிரிக்ஸ் என்ற கிரேக்கச் சொல்லுக்கு ‘தொல்சிறகி’ என்று பொருள்) புறச்சூழலின் தன்மைக்கேற்ப வெப்பநிலை மாறாமல், ஒரே சீரான வெப்பநிலையை கொண்டிருக்கும் பறவைகள், ‘வெப்பநிலை மாறாத’ (Warm blooded animals) வகையைச் சேர்ந்தவை. உலகின் பெரும்பான்மை பகுதிகளின் சூழலுக்கேற்ப தகவமைத்துக் கொள்ள பறவைகளுக்கு தங்களது உடல் முழுதும் போர்த்தப்பட்ட இறகுகள் முக்கிய காரணியாக உள்ளன. முட்டையிட்டு, தங்களது உடல் வெப்பத்தால் குஞ்சு பொரிக்கும் முதுகெலும்பி வகையைச் சேர்ந்த பறவைகளுக்கு வியர்வைச் சுரப்பிகள் கிடையாது.
பறவைகளின் உடல் முன் நகர, தங்களது திறன்மிக்க இறகுகளால் காற்றை இழுத்து பின்புறம் தள்ள, ‘பறத்தல்’ சாத்தியமாகிறது. மரக்கிளைகளில் தொற்றிக் கொண்டும், காற்றில் சறுக்கிக் கொண்டிருந்த மூதாதையான தொல்சிறகியில் இருந்து முழுமையாக பறப்பதற்கு பல நூற்றாண்டுகளை பறவைகள் எடுத்துக் கொணடன.
உடல் முழுதும் இறகுகளால் போர்த்தப்பட்ட பறவைகள் கூடு கட்டி முட்டையிட்டு குஞ்சு பொரிக்கின்றன. இவற்றில் பலப்பல வேறுபாடுகள் காணப்படுகின்றன. விரல் அளவுள்ள பறவையில் இருந்து மனிதன் உயரமுள்ள தீக்கோழி வரை பல்வேறு வேறுபாடுகள், அளவுகள், நிறங்கள், கூடுகளின் அமைப்பு என சூழலுக்கேற்ப பரிணமித்துக் வாழ்கின்றன.
பறக்கவியலாத பென்குவின்கள், ஆயிரக்கணக்கான மைல்களை பறந்தே கடக்கும் ஆலாக்கள், உள்ளான்கள், இனிய குரலெழுப்பும் குயில்கள், மரத்திலேயே வாழ்வை கழிக்கும் இருவாட்சிகள், நிலத்தில் முட்டையிடும் கவுதாரிகள், நவீன மனிதர்களால் சிந்திக்கவியலாத கூடமைக்கும் தூக்கணாங்குருவிகள், காட்டின் துப்புரவாளனாக பிணம் தின்னிக் கழுகுகளும், நகர துப்புரவாளனாக காகங்களும், உருமறைத் தோற்றத்தில் இரவாடிகளாக பரிணமித்துள்ள பக்கிக் குருவிகள் என நீர், நிலம், பனிப்பாறைகள், காடு, மேடு, மலைகள், சதுப்பு நிலங்கள, சமவெளிகள் என அனைத்தையும் வெற்றி கொண்டு பறவைகள் வாழ்க்கை நடத்துகின்றன.
மனிதர்களை சார்ந்து வாழும் சிட்டுக்குருவிகள், மனிதர் காலடிப்படாத காடுகளில் வாழும் இருவாட்சிகள், முட்டையிலிருந்து வெளிவந்தவுடன் பெற்றோருடன் சுற்றித் திரியும் ஆள்காட்டிக் குருவிகளின் குஞ்சுகள், கூட்டைவிட்டு பல நாட்கள் பறக்க இயலாத வேட்டையாடிப் பறவைகளின் குஞ்சுகள் என எண்ணற்ற வகைகளும், வேறுபாடுகளும் காணப்படுகின்றன. சூழலின் சமத்தன்மைக்கும், மனித சமூகத்திற்கும் பல நன்மைகளை செய்யும் பறவைகளற்ற உலகை நம்மால் கற்பனை செய்ய இயலாது. ஒருவேளை பறவைகள் முற்றாக அழிய நேர்ந்தால், அடுத்த சில ஆண்டுகளில் மனித இனம் பேரழிவை சந்திக்க நேரும் என்பதே மறுக்க முடியாத உண்மையாக உள்ளது.
அந்தவகையில், உலக பரிணாம வளர்ச்சியில் பலவகையான பறவைகள் தோன்றி மறைந்து இருப்பினும், இன்று உலகளவில் 155 குடும்பங்களில், 27 ஒழுங்கினங்களில் சுமார் 10,000 பறவைகள் வாழ்வதாக கண்டறியப்பட்டுள்ளது.
நீர்வாழ் பறவைகள்
நீண்ட கால்களையும், வாத்தின் அலகையும் கொண்ட, சுமார் 50 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்ட நீர்ப்பறவையை ஒத்த தொல்படிவமே, நீர்ப்பறவைகளின் மூதாதையாக இருக்கலாம் என பறவையியலாளர்கள் அனுமானிக்கின்றனர்.
Waterfowl – என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் நீர்வாழ் பறவைகள் அன்சரி ஃபார்ம்ஸ் (Anseri forms) வகையைச் சேர்ந்தது. அனாடிடா (Anatidae) குடும்பத்தில் அடங்கும் நீர்ப்பறவைகளில் வாத்துக்கள் (Ducks, Geese), அன்னம் (Swans), கரையோரப் பறவைகளும் (Waders) அடங்குகின்றன. நீர்ப்பறவைகள் பெரும்பாலும் மீனுண்ணிகளாக இருப்பினும், நீர்வாழ் பூச்சிகள், இருவாழ்விகள், நுண்ணுயிரிகள், மெல்லுடலிகள் போன்றவைகளும் முக்கிய உணவாக அமைகின்றன. நீரில் மூழ்கும் திறன் மிக்க நீச்சல் வீரர்களாக நீர்ப்பறவைகள் காணப்படுகின்றன. நடுத்தர, பெரிய உடலமைப்பு, நீரில் நீந்த, நடக்க தகவமைந்த வலைப்பின்னல் கொண்ட நீண்ட, மெல்லிய கால்களின் அமைப்பு, தட்டையான (அ) வட்ட வடிவ அலகுகள், நீரில் நன்கு மூழ்கி மீன்கள் அல்லது மெல்லுடலிகளை பிடிக்கும் திறன் என பலவகைப்பட்ட தகவமைப்புகளை நீர்ப்பறவைகள் பெற்று பரிணமித்துள்ளன. நீர்ப்பறவைகளில் பெரும்பாலானவை வலசை செல்லும் பண்பு கொண்டவையாக உள்ளன.
வாழ்வின் பெரும்பகுதியை நீர்நிலையை சார்ந்திருக்கும் பறவைகள், ‘நீர்வாழ் பறவைகள்’ என அழைக்கப்படுகின்றன. வாழ்விடம், இரை, கூடமைத்தல், இனப்பெருக்கம் என யாவும் நீரை சார்ந்தும், நீர்நிலைகளில் அமைந்துள்ள தாவரங்களை சார்ந்தே இப்பறவைகளின் வாழ்வியல் பின்னப்பட்டுள்ளது. நீர்நிலைகளின் தூய்மையும், சூழல் சமத்தன்மையும் நீர்வாழ் பறவைகளின் வருகையில் எதிரொலிக்கிறது.
கரையோரப் பறவைகள்
Waders என ஆங்கிலத்தில் சுட்டப்படும் கரையோரப் பறவைகள், உருவில் சிறியதாக காணப்படுகின்றன. கடற்கரையோரங்களில் அலைகளின் ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப ஒடியாடி புழு, பூச்சிகளை சுறுசுறுப்பாகத் பிடித்துண்ணும். அலைகளின் ஏற்றத்தில் கொண்டு வந்து, கரையில் சேர்க்கப்படும் புழு, பூச்சிகள், நுண்ணுயிர்களை பிடித்துண்ணவே, கரையோரங்களில் வேகமாக செயலாற்றுகின்றன. கரையோரப் பறவைகளில் பெரும்பான்மை வலசைப் பறவைகளாக அறியப்படுகின்றன.
Dunlin, Western Sandpiper போன்ற கரையோரப் பறவைகள் ஆர்டிக் பகுதியில் இனப்பெருக்கம் செய்துவிட்டு, இளவெப்பமான பகுதிகளுக்கு நீண்ட தூரம் பயணிக்கின்றன. Semipalmated Sandpiper என்ற உள்ளான்கள் நீண்ட தூரம் பயணிப்பது கண்டறியப்பட்டுள்ளது. சில கரையோரப் பறவைகள் உணவுக்காக கூட நிற்காமல் நெடுந்தொலைவு பறந்து வாழ்விடத்தை அடைகின்றன.
Bar-tailed Godwit என்ற உள்ளான்கள் எங்கும் நிற்காமல் சுமார் 11,000 கி.மீ., தூரத்தை அலாஸ்காவிலிருந்து நியூசிலாந்து வரை பறந்து செல்வதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. தங்களது உடல் எடைக்கு தக்கவாறு, நீண்ட தொலைவு பறப்பதற்கு தேவையான கொழுப்பு மற்றும் ஆற்றலை 55 விழுக்காட்டிற்கும் அதிகமாக சேமித்துக் வைத்துக் கொண்டு பறக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. உலகளவில் கரையோரப் பறவைகள் (Waders) சுமார் 210 வகைகளாக காணப்படுகின்றன. கரையோரப் பறவைகளில் பெரும்பாலானவை பூச்சியுண்ணிகளாக காணப்படுகின்றன. சதுப்பு நிலங்கள், கடற்கரையோரம், ஏரி, ஆறு, குளங்கள், முகத்துவாரங்கள், உப்பங்கழிகள், காயல்களின் கரையோரங்களில் குழுவாகவும், தனித்தும் பூச்சிகளை பிடித்துண்பதை அவதானிக்க முடியும்.
கடற்பறவைகள்
கடல்களை அடிப்படையாக கொண்டு கடற்பறவைகள் இயங்குகின்றன. கரையோரங்கள், மீனவர்களின் மீன்பிடிக் காலங்கள் சார்ந்து, நீரின் பறந்தபடி மீன்களை இரையாக பிடித்துண்ணுகின்றன. மீன் உணவையே, கடற்பறவைகள் முழுமையாக சார்ந்துள்ளன.
ஆர்டிக் ஆலா மிக நீண்ட தூரமாக சுமார் 22,000 கி.மீ., (14,000 மைல்) கடந்து சாதனை படைத்துள்ளன. Manx Shearwater என்ற கடற்பறவை தனது 50 ஆண்டுகால வாழ்நாளில் 8 மில்லியன் (5 மில்லியன் மைல்) தூரத்தை வலசை மேற்கொள்வதற்காக பயணத்திருப்பது புருவங்களை உயர்த்த வைத்துள்ளது.
மேற்கண்ட நீர்ப்பறவைகள், கரையோரப் பறவைகள், கடற்பறவைகளில் பெரும்பாலானவை வலசைப் பறவைகளாக அறியப்படுகின்றன. இவற்றின் வாழ்வியல் நீரை சார்ந்தே அமைந்துள்ளன. நீர்நிலைகளின் அழிவும், இரை பற்றாக்குறையும், வாழ்விட தகர்ப்பும் இவற்றின் வாழ்வை கேள்விக்குள்ளாக்குகின்றன.
இவற்றின் வாழ்விடம் நீர்நிலைகள் எனும்போது, தமிழகத்தில் நீர்நிலைகளின் நிலையை இத்துடன் பொருத்தி பார்த்தல் அவசியமானதாகும். இந்த புரிதலின் அடிப்படையிலேயே நீராதாரங்களை பாதுகாக்கவேண்டியுள்ளது.
- ஏ.சண்முகானந்தம்
Leave a Reply