கோவை மாவட்டத்தில் கிராவல் மண், மசனை கல்லை அரைத்து ‘மணலாக’ மாற்றி விற்பனை செய்யும் மோசடி பரவலாக நடக்கிறது. மாநில அளவில், மணல் பற்றாக்குறை நீடிக்கிறது. இதனால், மணல் தேவை அதிகரிப்பால் அதன் விலை உச்சத்தை எட்டி விட்டது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி போலி மணல் தயாரிக்கும் பணி கோவை வட்டாரத்தில் பரவலாக நடக்கிறது. கிணறு, பள்ளம், வாய்க்கால் தோண்டிய மண், பயன்பாடில்லாத பொடி பொடியாக உதிரும் தன்மை கொண்ட கல் (மசனை கல்), கிராவல் மண், சரளை மண் போன்றவற்றை கிரசரில் அரைத்து அதில் மணல் போன்ற தன்மையும், மினுமினுப்பும் காட்டும் வகையில் வேதிப்பொருட்களை கலக்கிறார்கள். ஒரிஜினல் மணலுடன் இந்த போலி மணலை வெறும் கண்ணால் ஒப்பிட்டு பார்க்க முடியாது. மணல் சலிக்கும் சல்லடையில் 5 முறை சலித்தால் 5 சதவீதத்திற்கும் மேல் பொடி காணப்பட்டால் அது போலி மணல் என கண்டுபிடிக்கலாம். இல்லாவிட்டால் ஒரு சட்டி மணலை நீரில் கலந்தால் 7 முதல் 10 சதவீதம் நீரில் கரைத்து விடும். வேதிப்பொருள் சோதனைக்கு உட்படுத்தினால் போலி மணல் என்பதை உறுதி செய்ய முடியும் என பொதுப்பணித்துறை பொறியாளர்கள் தெரிவித்தனர். போலி மணல் தயாரிக்கும் நிறுவனம் தொடர்பாக கனிம வளத்துறை, மாசு கட்டுபாடு வாரியம், வருவாய்த்துறை, போலீசாருக்கு கோவை மணல் சப்ளை செய்யும் லாரி உரிமையாளர்கள் தகவல் தெரிவித்தனர். ஆனால் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
போலி மணல் ‘எம்.சான்ட்’ என்ற பெயரில் முறையான ஆவணத்தில் விற்பனையாகிறது. கோவை மாவட்டத்தில் கிணத்துக்கடவு, தேகாணி, மைலேரிபாளையம், செட்டிபாளையம், நாச்சிபாளையம், திருமலையம்பாளையம், சின்னகுயிலி, நெகமம், மதுக்கரை, கரடிவாவி உள்ளிட்ட பகுதியில் உள்ள சில கிரசர்களில் போலி மணல் தயாரிக்கப்படுகிறது. இந்த போலி மணல் தமிழகம் மட்டுமின்றி, கேரள மாநிலத்திற்கும் கடத்தப்படுகிறது. போலி மணல் மூலமாக அதிகாரிகளுக்கு பணம் குவிவதாக தெரிகிறது. ஆற்று மணல் என்ற நம்பிக்கையால் பாலீஷ் போட்ட மண்ணை நம்பி வாங்கி ஏமாறுவோர் அதிகரித்து வருகின்றனர்.
கிராவல் மண்ணுக்கு பாலீஷ் போட்டு போலி மணல் தயாரித்து விற்பனை

Leave a Reply