ஒரு காலத்தில் மாநிலத்தின் மிகப்பெரிய சதுப்பு நிலங்களில் ஒன்றாகத் திகழ்ந்த பள்ளிக்கரணை, காலப்போக்கில் ரியல் எஸ்டேட்டாக மாறி வீடுகளாகவும், பெருநிறுவனங்களின் கட்டடங் களாலும் அழிந்து சுருங்கி வருகிறது. கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள், இன்றைய மத்திய கைலாஷ் பகுதி வரை பள்ளிக்கரணை சதுப்புநிலம் பரந்து விரிந்து இருந்திருக்கிறது. இன்றைக்கு பள்ளிக்கரணை சதுப்புநிலத்தின் மீதுதான் சுற்றுச்சூழலைப் பற்றி ஆராய்ச்சி செய்யக்கூடிய தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம், காற்றாலை தொழில் நுட்ப மையம் போன்ற மத்திய அரசு நிறுவனங்களும் அமைந்துள்ளன.
குளிர் காலத்தில் வலசை வரும் பறவைகளையும் உள்நாட்டு வலசைப் பறவைகளையும் பள்ளிக்கரணையில் பெருமளவு பார்க்கலாம். பறவை இனங்களில் முக்கிய மாக வலசை வரும் உள்ளான்களில் ஆற்று உள்ளான் (Marsh Sandpiper), பச்சைக் காலி (Green Sandpiper), பொறி உள்ளான் (Wood Sandpiper), உள்ளான் (Common Sand piper) பவளக் காலி (Common Redshank) போன்றவையும், நீலத் தாழைக் கோழி (Purple Moorhen), தாழைக் கோழி (Common Moorhen), நாமக் கோழி (Common Coot), நீலவால் இலைக் கோழி (Pheasant-tailed Jacana) போன் றவை இங்கேயே இனப்பெருக்கம் செய்து வாழ்ந்து வருகின்றன. அழிந்து வரும் பறவை இனமான கூழைக் கடா (Grey Pelican) இங்கே இருக்கிறது. நன்னீர் மீன்களை மட்டுமே உண்டு வாழும் விரால் அடிப்பானும் (Osprey) இங்கே காணப்படுகின்றது. இந்தப் பறவைகளுக்கு முக்கிய உணவாகும் சிப்பி, சேற்று நண்டு, மடவை போன்ற நீர் வாழ் உயிரினங்களும் பள்ளிக்கரணையில் பெருமளவு உண்டு என்பதே இதற்குக் காரணம்.
2002ஆம் ஆண்டில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் இந்த சதுப்புநிலப் பகுதியையும் அதன் வாழிடத் தரத்தையும் கண்டுபிடிக்க ஓர் ஆராய்ச்சியை மேற்கொண்டது. அதன்படி இச்சதுப்பு நிலத்தில் வாழும் பல்லுயிர்களின் வகைகள் கண்டறியப்பட்டன. 2003ஆம் ஆண்டில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் இச்சதுப்பு நிலப்பகுதியில் 548 ஹெக்டேர் (1,350 ஏக்கர்) பரப்பளவை பாதுகாக்கப்பட்ட இடமாக மாற்றப் பரிந்துரைத்தார். அரசு சார்பில் இப்படி பல்வேறு பரிந்துரைகளும் சட்டங்களும் கொண்டு வரப்பட்டாலும் கூட பள்ளிக்கரணையின் பாதுகாப்பில் பெரிதாக எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
2011இல் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இருந்த 421 ஏக்கர் (170 ஹெக்டேர்) நிலப்பகுதியை தன் வசம் ஒப்படைக்குமாறு தமிழக அரசு வனத்துறை கோரிக்கை விடுத்தது. தற்போது 317 ஹெக்டேர் பகுதி வனத் துறை வசம் இருக்கிறது. இந்தப் பகுதியில் மட்டும்தான் துஷ்பிரயோக நடவடிக்கைகள் பெருமளவு குறைந்துள்ளன. அரசாங்கம் ஏற்கனவே ரூ.15.75 கோடி செலவில் ஒரு மறுசீரமைப்பு திட்டத்தை கொண்டு வந்துள்ளது. அத்துடன் பள்ளிக்கரணை பாதுகாப்பு சங்கம் என்ற அமைப்பை உருவாக்குவதற்கும் அரசு முயற்சி மேற்கொண்டு வருகின்றது.
இப்படி தட்டுத் தடுமாறி அரசு பல சட்டதிட்டங்களைக் கொண்டு வந்தாலும், குப்பைகள் கொட்டப்படுவதும் எரிக்கப்படுவதும் நீதி மன்ற எச்சரிக்கைகளை மீறி தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றது என்பது கவலை தரக்கூடிய உண்மை. அடுத்த வலசை காலத்துக்கு பறவைகள் வந்தால், பள்ளிக்கரணை அவற்றுக்குப் புகலிடமாக இருக்குமா, பள்ளிக்கரணையை சுற்றி வாழும் மக்கள் சுத்தமான காற்றை சுவாசிக்க முடியுமா என்பதும் எப்போதும் கேள்விக்குறியாகவே இருக்கின்றது.
பேராசிரியர் த.முருகவேள்
(செப் 2012, பூவுலகு இதழில் வெளியான கட்டுரையின் சிறுபகுதியை
உலக சதுப்புநில நாளை (பிப்ரவரி 2) முன்னிட்டு மீண்டும் வெளியிடுகிறோம்)
Leave a Reply