வங்காரி மாத்தாய்

வங்காரி மாத்தாய்

“உலகில் நடந்த, நடக்கும் போர்களை நாம் உற்றுநோக்கினால், அவை வளத்தை அபகரிப்பது அல்லது வளத்தை ஒரு பிரிவினருக்கு கிடைக்கவிடாமல் செய்வதால் தான் ஏற்பட்டன; ஏற்படுகின்றன.” வங்காரி மாத்தாய்.

வீட்டுத்தேவைகளுக்காகவும், தொழிற்தேவைகளுக்காகவும் மரங்கள் அதிகமாக வெட்டப்படும் இன்றைய நுகர்வுசமூகத்தில், தன் வாழ்நாளில் ஆகப்பெரும்பான்மையான ஆண்டுகளை மரக்கன்றுகளை நடுவதையே ஒரு பேரியக்கமாக நடத்திய வங்காரி மாத்தாய் எனும் கென்ய தேசத்துப் பெண்மணியைப் பற்றி நாம் அறிந்துகொள்வது அவசியமல்ல; காலத்தின் நிர்பந்தம்.

ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள கென்யா நாட்டின் நெய்ரி மாவடடத்தில் உள்ள இதிதி கிராமத்தில் 1940ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தின் முதல் நாளில் வங்காரி மாத்தாய் பிறந்தார்.

படிப்பும் குடும்பவாழ்வும்:
வங்காரி தன் பள்ளிப்படிப்பை நெய்ரி மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் தொடங்கினார். ஜான் எஃப் கென்னடியின் கல்வி அறக்கட்டளை ‘ஏர்லிஃப்ட் ஆஃபிரிக்கா’ என்னும் திட்டத்தின் மூலம் 300 மாணவர்களை அமெரிக்கா சென்று கல்லூரிப் படிப்பை படிக்க நிதியுதவி செய்தது. படிப்பில் சிறந்து விளங்கிய வங்காரி இதில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1964ல் பயாலஜி துறையில் இளங்கலைப் படிப்பு முடித்து, 1966ம் வருடம் பயலாஜிக்கல் சயின்ஸ் துறையில் முதுகலைப் பட்டமும் பெற்றபின் வங்காரி நாடு திரும்பினார்.

கென்யத்தலைநகரில் உள்ள நைரோபி பல்கலைகழகத்தில் முனைவர் பட்டத்துக்கு விண்ணப்பித்தபோது மாணவர்களும் பல்கலைக்கழக அலுவலர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனையும் மீறி கால்நடை மருத்துவத்தில் முனைவர் படிப்பிற்கான வகுப்பில் சேர்ந்து, பட்டம் பெற்ற முதல் கென்யப்பெண்மணி வங்காரி மாத்தாய் தான். பின், அதே துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றி, சில வருடங்களில் அத்துறையின் தலைவரானார். பல்கலைக்கழகத்தின் ஒரு துறையின் முதல் பெண் தலைவர் என்ற பெருமையையும் வங்காரி மாத்தாய் பெற்றார்.

ம்வாங்கி மாத்தாய் என்பவரைத் திருமணம் செய்துக்கொண்டு குடும்ப வாழ்வில் ஈடுபட்ட வங்காரி மூன்று குழந்தைகளுக்கு தாயாரானார். 1977ம் ஆண்டு ம்வாங்கி வங்காரியை விவாகரத்து செய்தார். இப்பிரிவு வங்காரியை துவண்டு போக செய்தாலும் விரைவில் மீண்டு எழுந்தார்.

பொதுவாழ்வும் அர்ப்பணிப்பும்:
1976ம் ஆண்டு முதல் கென்ய தேசிய பெண்கள் கமிஷன் என்னும் சமூக அமைப்பில் தீவிரமாக பங்காற்றினார் வங்காரி. 1977ம் ஆண்டு கிரீன்பெல்ட் மூவ்மென்ட் என்ற அமைப்பை உருவாக்கினார். 1976ல் கென்ய தேசிய பெண்கள் கமிஷனில் இணைந்தது முதல் கென்யாவின் ஊரகப்பகுதிகளில் வாழும் பெண்களுடன் நேரடித்தொடர்பு ஏற்பட்டது. ஊரகங்களில் வாழும் குடும்பங்களின் வாழ்வு மிகவும் வறண்டுபோயுள்ளதையும், அவர்களின் உணவு பாதுகாப்பானதாக இல்லை என்பதையும், சமைக்க விறகுகளைத் தேடி வெகு தூரம் தினமும் நடந்து செல்வதையும், பணிபுரியும் இடங்களில் குறைந்த ஊதியம் கிடைக்கபெறுவதையும் அக்குடும்பங்களுடன் உரையாடும்போது வங்காரிக்கு தெரியவந்தது.

இப்பிரச்சனைகளுக்கு தன்னாலான தீர்வை முன்னெடுக்க சிந்திக்கலானார் வங்காரி. தன் சிறுவயதில் தன் வீட்டருகே இருந்த ஓடை தற்போது வறண்டு இருப்பதையும், 100 மரங்கள் ஆப்பிரிக்காவில் வெட்டப்பட்டால், 9 மரங்கள் தான் நடப்படுகின்றன என்ற ஐ.நா ஆய்வையும், ஊரகப்பெண்களின் இன்றைய வறுமை நிலையையும் ஒன்றோடொன்று ஒப்பிட்டுப்பார்த்தார். எளிய மனிதர்களால் தங்கள் வாழ்விற்கும், சுற்றுச்சூழலுக்கும் செய்யக்கூடியது மரம் நடுதல் தான் என்பதைக் கண்டறிந்தார். மரங்கள் சமைக்க விறகு தரும்; கால்நடைகளுக்கு தீவனம் தரும்; வேலி அமைக்க வேண்டியவைகளை தரும்; பசுமையை அதிகரிக்கும்; நீர் நிலைகளை அதிகரிக்கும்; வெட்டப்படும் மரங்களுக்கு ஈடாக அதிகமாக மரங்கள் நடப்பட்டால் சூழலின் சமநிலை பேணப்படும் என்பதை வங்காரி உணர்ந்தார்.

கிரீன்பெல்ட் மூவ்மென்ட் மூலம் அதிகமாக மரங்கள் நடவேண்டும் என தீர்மானித்து தன் சகாக்களுடன் திட்டங்களை வகுக்கத் தொடங்கினார் வங்காரி. தேசிய அளவிலான நாற்றுப்பண்ணைகள் வனத்துறையினரிடம் தான் அப்போது இருந்தன. அவர்களிடமிருந்து போதுமான வரவேற்பு கிடைக்கவில்லை. சாதாரண மக்களுக்கு அதிகமான மரங்களை எவ்வாறு நடத்தெரியும் என்பது அவர்களின் நிலைப்பாடு. எனினும், வங்காரி கேட்ட உதவிகளை செய்தனர். ஆனால், வனத்துறையினர் தங்கள் நிலைப்பாடுகளை விரைவில் மாற்றிக்கொள்ள வேண்டியதாயிற்று. கிரீன்பெல்ட் மூவ்மென்ட் அதிகமான மரங்களை நட்டதோடு மட்டுமல்லாமல் முறையாக அவற்றைப் பராமரிக்கவும் செய்தனர். ஊரகப்பெண்களுக்கு நாற்றங்கால் பண்ணைகளை அமைக்கக் கற்றுக்கொடுத்து வேலைவாய்ப்பை ஏற்படுத்தினர்.

அதுவரை சூழலியல் செயற்பாட்டாளராக பரிணமித்த வங்காரி மாத்தாயை அரசியலில் ஈடுபடுத்தியது அப்போதைய கென்ய சர்வாதிகார அரசு. தானியல் அரப் மோய் தலைமையிலான அரசு நைரோபி நகரில் இருந்த உகுரு பூங்காவில் 62 அடுக்குகளை கொண்ட அடுக்குமாடி கட்டிடத்தைக் கட்ட அரசு தீர்மானித்தது. நகரின் நடுவே கானகம் போல இருந்த பூங்காவில் கட்டிடம் கட்டுவதா எனக் கொந்தளித்த வங்காரி மாத்தாய் அவ்வூரில் இருந்த ஜனநாயக அமைப்புகளுடன் சேர்ந்து போராட்டத்தில் இறங்கினார். தொடர் போராட்டங்களில் ஈடுபட்டவர்களை கலைந்துபோகச் சொல்லி கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும், கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டும் தடுக்க நினைத்தது. ஆனால், வங்காரி மாத்தாயும் அவருடன் இணைந்து போராடியவர்களும் போராட்டங்களைக் கைவிடவில்லை. சுற்றுச்சூழலுக்கு ஆதரவான இப்போராட்டத்தின் தீவிரத்தைக் கண்டு அரசு அத்திட்டத்தைக் கைவிட வேண்டியதாயிற்று.

அரசை பொறுப்புணர்வுடன் செயல்படவைக்க, நாட்டின் இயற்கை வளங்களை சுரண்டுவதைத் தடுக்க தீவிரமாக போராட வேண்டும் என தீர்மானித்தார் வங்காரி. போராட்டங்களில் வங்காரி காட்டிய தைரியமும், விடாமுயற்சியும், அணுகுமுறைகளும் மற்றப் பெண்களை வெகுவாகத் தூண்டின. அவர்களையும் வங்காரி போராட வைத்தார். அரசுடனான போராட்டங்கள் அதிகரிக்க, அதிகரிக்க வங்காரி தொடர்ந்து கைது செய்யப்படுவதும், பின் விடுதலையாவதும் தொடர்ந்தன.

அதிபர் தானியல் அரப் மோய் மேல் இருந்த கடும் அதிருப்தியை 2002ல் கென்யாவில் நடைபெற்ற தேர்தலில் மக்கள் வெளிப்படுத்தினர். ம்வாய் கிபாகியை அதிபராக தேர்ந்தெடுத்தனர். அத்தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர் பதிவிக்கு போட்டியிட்டு வெற்றிப் பெற்றிருந்த வங்காரி மாத்தாயை சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள், கானுயிர்களுக்கான துணை அமைச்சராக ம்வாய் கிபாகி நியமித்தார். சுற்றுச்சூழலுக்கும், பெண்கள் முன்னேற்றத்துக்கும் தன் பங்களிப்பை இன்னும் தீவிரமாக்கினார் வங்காரி.

மிகப்பெரிய அச்சுறத்தலாக விளங்கிய எயிட்ஸ் நோயிற்கு எதிரான விழிப்புணர்வை கென்ய அரசு 2003ல் தொடங்கியது. வங்காரி மாத்தாய் கிரின்பெல்ட் இயக்கத்தினருடன் இணைந்து பெண்களிடம் இந்நோய் பற்றிய விழிப்புணர்வை முன்னெடுத்து சென்றார். உடல்நலத்திலும், கல்வியிலும் பின்தங்கிய பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் மையங்களை உருவாக்கி உதவினார்.

சமூக அர்ப்பணிப்புடன் தொடர்ந்து இயங்கி வந்ததால் வங்காரிக்கு அமைதிக்கான நோபல் பரிசு 2004ம் ஆண்டு வழங்கப்பட்டது. அவ்விருது வாங்கிய போது அவர் “நோபல் விருது பெறும் முதல் ஆப்பிரிக்க பெண்மணி என்கிற அடிப்படையில் கென்ய மக்களின், ஆப்பிரிக்க மக்களின் சார்பிலும் உலகத்தின் சார்பிலும் இந்த விருதைப் பெற்றுக்கொள்கிறேன்” என்றார்.

Resurgence என்ற சூழலியல் இதழுக்கு அவர் அளித்த பேட்டியில் ஒரு இடத்தில் இவ்வாறு கூறினார் “மக்களின் கூட்டு மனசாட்சி அரசியல்வாதிகளின் மதியினை மாற்றும் என்று நான் நம்புகிறேன். தெளிவான கருத்துகளின் அடிப்படையில் மக்கள் கருத்து உருவாக்கப்படாமல் இருந்தால், அரசியல்வாதிகளுக்கு நெருக்கடியைத் தர முடியாது. எவ்வளவு தூரம் மாற்றத்தை நோக்கி மிகப்பெரிய அளவில் மக்களையோ அல்லது இயக்கத்தையோ கட்டமைக்கிறோமோ, அவ்வளவு தூரம் அரசுகளை அரசியல்ரீதியாக பொறுப்புடைமை ஆக்க முடியும்.”

உடல்நலக்குறைபாடு காரணமாக, கென்யத் தலைநகர் நைரோபியில் உள்ள மருத்துமனையில் சிகிச்சைபெற்று வந்த வங்காரி மாத்தாய் 2011ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25ம் நாள் மரணமடைந்தார். அவர் மறைவுக்குப் பிறகும் அவரால் தொடங்கப்பட்ட கிரின்பெல்ட் மூவ்மென்ட் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
12 விருதுகள், 15 முனைவர் பட்டங்கள், 50க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்ற வங்காரி மாத்தாய் 4 புத்தகங்களை எழுதியுள்ளார். அவை:
“The Green Belt Movement”, “Unbowed”, “The Challenge for Africa” மற்றும் “Replenishing the Earth”.

உதவிய தரவுகள்:
1. நூல்: ‘மாற்றத்துக்கான பெண்கள்’ வங்காரி மாத்தாய் – பூவிலகின் நண்பர்கள் வெளியீடு.
2. Green Belt Movement இணையதளம்
3. Wikepedia

 

கோ. முருகராஜ்

 

1 Comment

  1. NARAYANAN
    May 28, 2019 at 6:15 AM

    ரொம்ப அழகான தொகுப்பு.

Leave a Reply