தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தடை இல்லாச் சான்றிதழை 01.08.1994இல் இரு கட்டுப்பாடுகளோடு கொடுத்தது. மன்னார் வளைகுடாவிலிருந்து 25 கிலோ மீட்டருக்கு அப்பால் தொழிற்சாலை நிறுவப்பட வேண்டும். தொழிற்சாலையைச் சுற்றி 250 மீட்டருக்குப் பசுமை வளையம் உருவாக்க வேண்டும். இந்த இரு விதிகளையும் அப்பட்டமாக மீறியது ஸ்டெர்லைட் ஆலை. 250 மீட்டர் பசுமை வளையம் என்பது 25 மீட்டர் பசுமை வளையமாக மாற்றப்பட்டது அதைக்கூட நிறைவேற்றவில்லையென தருண் அகர்வால் ஆய்வுக் குழு வரை அறிக்கை கொடுத்துள்ளனர்.
ஆலை தொடங்கிய முதல் இரண்டு ஆண்டுகளில் தான் செய்த தவறுகளுக்காக ஒன்பது லட்சத்து நாற்பதாயிரம் ரூபாய் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் அபராதமாகக் கட்டியது ஸ்டெர்லைட் நிர்வாகம். ஆனால், அதன்பிறகு நடந்த விபத்துகளில் வழக்குகள் நடத்தாமலேயே இழப்புகள் மூடிமறைக்கப்பட்டது என்கிறது ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம்.
ஸ்டெர்லைட் ஆலையில் ஏற்பட்ட நச்சு வாயுக் கசிவால் 05.07.1997 அன்று அருகிலுள்ள நிறுவனத்தின் 165 பெண் தொழிலாளர்கள் மயங்கிவிழுந்தனர். அதில் சிலருக்கு கருச்சிதைவு ஏற்பட்டது. மாசுக்கட்டுப்பாடு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் செல்வம் கொடுத்த ஆய்வறிக்கையின்படி, சார் ஆட்சியர் சந்தீப் ஜெயின் உத்தரவின்படி அன்றைய நாளே இரவோடு இரவாக ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.
தமிழக அரசின் சார்பில் அமைக்கப்பட்ட அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் சொக்கலிங்கம், முனைவர் சாஸ்திரி, முனைவர் கிருஷ்ணமூர்த்தி,
முனைவர் கந்தபாலா ஆகியோரைக் கொண்ட நால்வர் குழு 1997ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஸ்டெர்லைட் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆய்வு செய்தது. பாதிப்பு இருந்தது உண்மைதான் என்பதை உறுதிப்படுத்திய அறிவியலாளர்களின் ஆய்வுக்குழுவால், அந்தப் பாதிப்புக்கு யார் காரணம் என்பதை சொல்ல இயலவில்லை.
பாதிக்கப்பட்டவர்களின் ரத்தத்தில் தாமிரத்தின் அளவு பலமடங்கு அதிகரித்து இருப்பதாக மருத்துவ அறிக்கைகள் சுட்டிக்காட்டியதை ஆய்வுக் குழு வெளியிடவில்லை.
1996 இறுதியில் ஹைதராபாத் ஐஐடி வேதியியல் துறை துணை இயக்குநர் ஏ.ஏ.கான், தேசிய வேதியியல் ஆராய்ச்சி மையத்தின் ஜோக்லேகர் குழுவினர் ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்து 1997 ஜனவரியில் தமிழக அரசுக்கு அறிக்கை கொடுத்திருந்தனர். பாதிப்புகள் இருப்பதை ஏற்றுக்கொண்ட அந்த அறிக்கை அதனை சரிசெய்ய பரிந்துரைகள் கொடுத்திருந்தது.
சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி டாக்டர் கண்ணா தலைமையில் நீரி அமைப்பினர் 1998 இல் ஆய்வு செய்து நீதிமன்றத்தில் அறிக்கை கொடுத்தனர். சுற்றுச்சூழல், நீர், நிலம், காற்று கடுமையாக பாதிக்கப்பட்டதாக ஆய்வுக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
அதனடிப்படையில் 23.11.1998 அன்று ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதியரசர்கள் லிபரான், பத்மநாபன் அமர்வு உத்தரவிட்டது.
ஆனால், அடுத்த சில நாட்களில் தலைமை நீதிபதியான லிபரான் தலைமையிலான அமர்வில் இருந்து வழக்கு கீழமை நீதிபதியான அகர்வால் தலைமையிலான அமர்வுக்கு மாற்றப்பட்டது. 25.12.1998 அன்று ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்க நீதிமன்றம் அனுமதி கொடுத்துவிட்டது.
நாக்பூர் நீரி நிறுவனம், 1998ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் நச்சு ஆலை சுற்றுப்புறச் சூழலுக்கும், நிலம், நீர், காற்று மண்டலத்திற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆய்வு அறிக்கை கொடுத்து இருந்தது. 2003ஆம் ஆண்டில் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு ஆதரவாக ஆய்வு அறிக்கை தந்தது.
இதற்கிடையில் 1998 நவம்பர் அறிக்கைக்கு பின்னர் 1.22 கோடி ரூபாய் நீரி அமைப்பில் உள்ள அறிவியலாளர்களுக்கு ஆலோசனைக் கட்டணமாக ஸ்டெர்லைட் வழங்கியுள்ளது தெரியவந்தது.
21.09.2004 இல் முனைவர் தியாகராசன் தலைமையிலான உச்ச நீதிமன்ற ஆய்வுக் குழு ஸ்டெர்லைட் தொழிற்சாலையை ஆய்வு செய்தது. அப்போது அனைத்து விதிகளும் மீறப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
தற்போது உள்ள உற்பத்தித் திறனுக்கு ஏற்ற அளவு கழிவுகளை சுத்திகரிக்கவும், பராமரிக்கவும் தேவையான கட்டமைப்பு இந்த ஆலையில் இல்லை. ஆலையின் விரிவாக்கப் பணிகளுக்கு சுற்றுச்சூழல் அமைச்சகம் இசைவு அளிக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றத்தின் குழு அறிவுறுத்தியது. ஆனால், மறுநாளே 22.09.2004 மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் விரிவாக்கத்திற்கு அனுமதி கொடுத்தது.
2004 நவம்பரில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அமைத்த குழு ஸ்டெர்லைட் ஆலையில் உரிமம் அளிக்கப்பட்டுள்ள 70,000 டன்கள் ஆனோடை விட அதிகமாக, அதாவது 1,64,236 டன்கள் ஆனோடை ஸ்டெர்லைட் உற்பத்தி செய்துள்ளது. இரு உருளைவடிவ தாங்கு உலைகளையும், கழிவுகளைத் தூய்மை செய்யும் ஓர் உலையையும், ஒரு ஆனோடு உலையையும், ஒரு ஆக்சிஜன் பிரிவையும், ஒரு கந்தக அமிலப் பிரிவையும், ஒரு காஸ்டர் பிரிவையும், ஒரு கன்வெர்டரையும் எவ்வித அனுமதியும் பெறாமல் கட்டியுள்ளனர். இரண்டு பாஸ்பரஸ் அமிலப் பிரிவுகளும், சுத்திகரிப்பு மற்றும் தொடர்ச்சியான காஸ்டர்ராட் உருவாக்கும் பிரிவும் அனுமதியின்றி கட்டப்பட்டு வருவதாகவும் அறிக்கை கொடுத்தது.
ஆனால், 2005இல் உச்சநீதிமன்ற ஆய்வுக் குழு இதனையெல்லாம் குறைத்து மதிப்பிட்டு அறிக்கை தயார் செய்தது. அனுமதியின்றி கட்டப்பட்ட கந்தக அமிலப் பிரிவு தனது உற்பத்தியை 2005 இல் தொடங்கியது. அனுமதி அளிக்கப்பட்ட 3,71,000 டன் கந்தக அமில உற்பத்தியைவிட அதிகமாக 5,46,647 டன் கந்தக அமிலம் 2004 ஏப்ரல் முதல் 2005 மார்ச்வரை உற்பத்தி செய்யப்பட்டது. இது உரிமம் வழங்கப்பட்டதை விட 47% அதிகம்.
07.04.2005இல் சுற்றுச்சூழல் அமைச்சகத் தலைமை இயக்குநரான முனைவர் இந்திராணி சந்திரசேகர் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு, “உச்சநீதிமன்றக் குழுவின் பரிந்துரைப்படி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு ஒப்புதல் அளிப்பதற்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் முடிவெடுக்கலாம்” என்று ஆணை பிறப்பித்தார். அதன்படி, 19.04.2005 அன்று தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவரான முனைவர் கிரிஜா வைத்தியநாதன் விதிமுறையை மீறிக் கட்டப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையின் புதிய பிரிவுகளுக்கு அனுமதி அளித்தார்.
ஸ்டெர்லைட் நிறுவனத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடந்திருப்பதாக புகார் கூறப்பட்டு வந்த நிலையில் 24.07.2010 அன்று ஸ்டெர்லைட் நிறுவனத்தின் துணைத் தலைவர் வரதராஜன் இந்திய அரசை ஏமாற்றி ரூ.750 கோடி வரிஏய்ப்பு செய்ததாகக் கைது செய்யப்பட்டார்.
சுங்கத்துறையின் சோதனையில் ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து விலை உயர்ந்த உலோகப் பொருட்கள் கடத்தப்பட்டதாக 2010 ஆகஸ்ட் 21 அன்று பதினெட்டுக் கோடி ரூபாய் மதிப்பிலான பிளாட்டினம், பல்லேடியம் கலந்த உலோகங்கள் வாகனத்துடன் பிடிபட்டது. இருவர் கைது செய்யப்பட்டனர்.
சுற்றுச்சூழலுக்கும், நிலம், நீர், காற்றுக்கும் மாசு ஏற்படுத்தியதாக 28.09.2010 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதியரசர் எலிப் தர்மராவ், பால்வசந்தகுமார் தலைமையிலான அமர்வு ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை நிரந்தரமாக மூட ஆணை பிறப்பித்தது.
அந்த உத்தரவை எதிர்த்து ஆலை நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. உச்ச நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் எந்த அளவில் பாதிக்கப்படுகிறது என்பதை ஆய்வு செய்து அறிக்கை தரும்படி நாக்பூரில் உள்ள மத்திய அரசின் தேசிய சுற்றுச்சூழல், பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு (நீரி) உத்தரவிட்டது.
நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த 40ஆவது நாளில் அதாவது 06.04.2011 அன்று நீரியின் சார்பில் டி. நந்தி தலைமையில், டி.ஜி. காஜ்காட்டே, ஏ.என். வைத்யா,
ஏ.டி. பனார்க்கர், எம்.பி. பாட்டீல், கார்த்திக், ஆர். சிவகுமார் ஆகிய ஏழு பேர் கொண்ட நிபுணர் குழு ஆய்வு செய்தது.
2004இல் உச்ச நீதிமன்றக் கண்காணிப்பு குழு பரிந்துரைகள் எதையும், ஸ்டெர்லைட் தொழிற்சாலையும் கடைப்பிடிக்கவில்லை, அரசும் கண்காணிப்பு செய்யவில்லை. தொழிற்சாலையிலும், சுற்றியுள்ள கிராமங்களிலும் பேரிடர் பாதுகாப்பு மற்றும் முன் தடுப்பு நடவடிக்கைகள் எதையும் செய்யவில்லை. தொழிற்சாலையின் உள்ளே அடிக்கடி மர்ம மரணங்கள் நிகழ்வதும், விபத்துகள் நடப்பதுவும் மூடி மறைக்கப்படுகின்றன. வேலை வாய்ப்பு என்ற பெயரில் மக்கள் ஏமாற்றப்பட்டு வருகின்றனர். என்று மூன்று நாட்கள் ஆய்வு செய்த நீரி ஆய்வுக் குழுவிடம் பொதுமக்கள் கருத்துக்களைக் கூறினர்.
உயர்நீதிமன்றத்தின் தடைக்கு எதிரான, ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் மேல்முறையீட்டு மனுவின் அடிப்படையில் உச்சநீதிமன்றத்தில் 02.04.2013 அன்று தீர்ப்பு வெளியானது.
அந்த தீர்ப்பில் Òஸ்டெர்லைட் ஆலை மூலமாக எழும் சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுப்பதற்கும், பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்கவும், சுற்று வட்டாரத்தை வளர்ச்சியடையச் செய்வதற்கும் நூறு கோடி ரூபாயை மாவட்ட ஆட்சியரிடம் ஆலை நிர்வாகம் வைப்பு நிதியாகக் கொடுத்துவிட வேண்டும். அதிலிருந்து வரும் வட்டி மூலம், பாதுகாப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்” என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறியதற்கு கடும் விமர்சனங்கள் எழுந்தன.
· காற்று மாசுத் தடுப்புச் சட்டம் பிரிவு 21-இன் கீழும், நீர் மாசுத் தடுப்புச் சட்டம் பிரிவு 25-இன் கீழும் ஆலையை நடத்த தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும் என்பது சட்டப்படி கட்டாயமா? அல்லது சாதாரண நடைமுறையா?
· ஆலையை அமைத்துக்கொள்ள அனுமதி கொடுத்தபோது 25 கி.மீ. இயற்கை உயிரினங்கள்வாழ் பகுதிக்கு அப்பால் அமைக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையை ஆலையில் இருந்து எந்தக் கழிவும் வெளியேற்றப்படவில்லை என்று ஸ்டெர்லைட் ஆலை கூறியதால் அந்த நிபந்தனை தளர்த்திக்கொண்டது சரியா?
· மன்னார் வளைகுடாப் பகுதி இயற்கை உயிரினங்கள் வாழ் பகுதி என்று திட்டங்களைச் செயல்படுத்தி வரும்போது வன விலங்குகள் சட்டத்தின்கீழ் அரசு அறிவிக்கை கொடுத்தால் மட்டுமே இயற்கை உயிரினங்கள் வாழ் பகுதியாக மன்னார் வளைகுடாப் பகுதியை ஏற்றுக்கொள்ள முடியும் என்றால் சரியா?
· 1998, 1999, 2003, 2005 ஆண்டுகளில் ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்த ‘நீரி’ அமைப்பு (தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆய்வு மையம்) கொடுத்த ஆய்வு அறிக்கையில் ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழலை மாசுபடுத்தியுள்ளது என்று கண்டறிந்த பின்பும், இழப்பீடு தொகை செலுத்தினால் ஆலையை இயக்கலாம் என்றால் சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்க இயலுமா?
என்று உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து வைகோ விமர்சனம் செய்தார்.
ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 2013 மார்ச் 23 அதிகாலையில் வெளியேறிய கந்தக டை ஆக்சைடு வாயு, காற்று மண்டலத்தில் கலந்து, தூத்துக்குடியில் பல்வேறு பகுதியில் உள்ள மக்கள் சுவாசிக்க முடியாமல், மூச்சுத் திணறலுக்கு ஆளாகினர். நச்சு வாயுக்கசிவு குறித்து மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் – செயலர் பாலாஜி ஆகியோர் தனித்தனியே அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்தனர். அதன்படி சுற்றுச்சூழல் மாசுபடுதல் தடுப்புச் சட்டம் 1981, பிரிவு 31 ஏ மற்றும் 191, 97 ஆகிய விதிகளின்படி ஸ்டெர்லைட் தாமிர ஆலையை மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் கார்த்திகேயன் உத்தரவின்படி 30.03.2013 அன்று நள்ளிரவு முதல் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தினால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, ஆலையின் உற்பத்தி முற்றிலும் நிறுத்தப்பட்டது.
தமிழக அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உத்தரவை எதிர்த்து தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் நிர்வாகம் வழக்குத் தொடுத்தது. தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் சென்னை மண்டலத்தில் நீதிபதி எம்.சொக்கலிங்கம், பேராசிரியர் ஆர்.நாகேந்திரன் கொண்ட அமர்வில் வழக்கு நடைபெற்றது. தேசிய பசுமைத் தீர்ப்பாயம் சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர் பி.எஸ்.டி. சாய், பேராசிரியை லெஜி பிலிப், தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியத்தின் உறுப்பினர் செயலர் மோகன்நாயுடு ஸ்டெர்லைட் நிர்வாகம் சார்பில் சுமதி ஆகியோரைக் கொண்ட நிபுணர் குழு ஒன்றை ஆய்விற்காக நியமித்தது.
ஆனால், வழக்கு சிலபல காரணங்களால் சென்னை மண்டல அமர்வில் இருந்து டெல்லி தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திற்கு மாற்றப்பட்டது. தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத்தின் தலைமை அமர்வின் தலைவரான, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதந்திரகுமார் அமர்வில், ஸ்டெர்லைட் வழக்கு நடந்துகொண்டு இருக்கும்போதே, ‘ஸ்டெர்லைட்டைத் திறக்க நான் ஆணையிடுவேன்’ என்று அவர் வெளிப்படையாகச் சொன்னார். தேசிய பசுமைத் தீர்ப்பாயம் 08.08.2013 அன்று வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் ஸ்டெர்லைட் மீண்டும் திறக்கப்பட்டது.
ஸ்டெர்லைட் ஆலையின் நச்சுவாயுக் கசிவினால் பொதுமக்கள் பாதிப்படைந்தது குறித்து தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் பெரம்பூர் சௌந்தரராஜன் (மார்க்சிஸ்ட்), ஒட்டப்பிடாரம் டாக்டர்.கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்), இராமநாதபுரம் பேரா.ஜவஹிருல்லா (மனித நேய மக்கள் கட்சி), திண்டுக்கல் பாலபாரதி (மார்க்சிஸ்ட்), அணைக்கட்டு கலையரசு (பாமக), செஞ்சி கணேஷ்குமார் (பாமக) ஆகியோர் கொண்டு வந்த சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு 16.04.2013 அன்று சட்டசபையில் பதிலளித்த தமிழ்நாடு சுற்றுச்சூழல்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், “மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் கண்காணிப்பு மையத்தில் ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து அதிகளவு கந்தக டை ஆக்சைடு வெளியானது உறுதி செய்யப்பட்டுள்ளது. தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் முடிவினைத் தொடர்ந்து, அப்பகுதியின் நிலம், நீர், காற்று மாசுபாட்டைத் தடுக்கும் நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளும்” என்று 2013ஆம் ஆண்டில் உறுதி கொடுத்தார். ஆனால் நடைமுறையில் கண்காணிப்பு நடவடிக்கைகள் இல்லாமல் போனது.
தூத்துக்குடி பகுதிக்கு வரும் உப்போடையில் புதுக்கோட்டை அருகே பாலத்தின் இருபுறங்களிலும் தாமிரக் கசடுகளான ஸ்லாக் கழிவுகள் கொட்டப்பட்டதால், 2015 டிசம்பரில் ஏற்பட்ட மழை வெள்ளம் மடத்தூர், மறவன்மடம், அந்தோணியார்புரம், சோரிஸ்புரம் வழியாக தூத்துக்குடி நகருக்குள் புகுந்தது. பெருவெள்ளத்தால் தூத்துக்குடி நகரமே தத்தளித்தது. பாதிக்கப்பட்ட மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர். உணவின்றி, உடையின்றி, குடிநீர் இன்றி, தங்குமிடம் இல்லாமல் தவித்த பொதுமக்கள் அரசுப் பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டனர். இதற்கு இடையில் பக்கிள் ஓடை வழியாக வந்த வெள்ளத்தில் கழிவுகளும் கலந்து வர வீடுகளில் தேங்கி நின்ற மழைநீரின் அடையாளம் மஞ்சள், ஆரஞ்சு, சிகப்பு என பல வண்ணங்களில் திட்டுத்திட்டாக அடையாளம் இட்டுச் சென்றது.
இதுபற்றிய புகார்கள் அதிகரிக்க 2016 பெப்ரவரி மாதத்தில் சார் ஆட்சியர் கோபாலசுந்தரராஜ் தலைமையில் ஓர் ஆய்வுக் குழுவை அமைத்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ரவிக்குமார் உத்தரவிட்டார். அந்தக் குழு பக்கிள் ஓடை, புதுக்கோட்டை உப்போடை, திருச்செந்தூர் ஓடைப்பாலம் உள்ளிட்ட பல இடங்களில் ஆய்வுகளை மேற்கொண்டு பாதிப்புகளை பட்டியலிட்டது.
ஸ்டெர்லைட் ஆலையைத் தொடர்ந்து இயக்குவதற்கான உரிமம் 2018 மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிலையில், ஆலை நிர்வாகம் இதனைப் புதுப்பிக்க விண்ணப்பித்தது. தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், ஏற்கெனவே விதித்திருந்த மாசுக் கட்டுப்பாடு தொடர்பான நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படவில்லை என்பதால், 09.04.2018 அன்று, அவ்விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது, ஆலையில் உற்பத்திப் பணிகள் நடக்கக் கூடாது என்று 12.04.2018இல் மாசுக்கட்டுப்பாடு வாரியம் அடுத்த உத்தரவு பிறப்பித்தது. 23.05.2018 அன்று ஆலையை மூடவும், ஆலைக்கான மின் இணைப்பை துண்டிக்கவும் அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் உத்தரவுகளை ஆமோதித்து, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 28.05.2018 அன்று அரசாணை வெளியிட்டார்.
தமிழக அரசின் அரசாணையை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடுத்தது. வழக்கை நீதிபதி கோயல் தலைமையிலான அமர்வு விசாரித்தது. ஸ்டெர்லைட் ஆலையின் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய குழு ஒன்றை அமைத்தது பசுமைத் தீர்ப்பாயம், அந்தக் குழுவில் நீதிபதி சந்துருவின் பெயரைப் பரிந்துரைத்து, பின்னர் தமிழ்நாட்டைச் சேர்ந்த நீதிபதிகள் யாரையும் நியமிக்க கூடாதென்ற ஸ்டெர்லைட் தரப்பின் வாதம் ஏற்கப்பட்டது.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிபதி வசிஷ்டர் பெயரை, பசுமைத் தீர்ப்பாயம் அறிவித்தது. அவர் மறுத்துவிட்டதால், மேகாலயா உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி, தருண் அகர்வால் தலைமையில் உண்மை கண்டறியும் குழு அறிவிக்கப்பட்டது.
நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஒருநாள் ஆய்வு நடத்தியது, தூத்துக்குடியில் ஒருநாளும், சென்னையில் மூன்று நாட்களும் மக்கள் கருத்துகளைக் கேட்டனர். ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு, ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம், ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம், ஸ்டெர்லைட் எதிர்ப்பு கிராம மக்கள் கூட்டமைப்பு, ஸ்டெர்லைட் எதிர்ப்பு தமிழர் கூட்டமைப்பு, அரசியல் கட்சிகள், வணிகர் சங்கம், பொதுநல அமைப்புகள் தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர்.
ஆலை தொடர்ந்து இயங்க வேண்டுமென்றால் 25 நிபந்தனைகளைப் பின்பற்ற உத்தரவிடவேண்டும் என மூவர் குழு 20.11.2018 அன்று தனது அறிக்கையில் கூறியது. நீரி நிறுவனம் ஜி.பி.எஸ். உதவியுடன் செய்த ஆய்வின்படி 25% இருக்க வேண்டிய ஆலையின் பசுமை வளையம் 12.1% தான் உள்ளது. நாங்கள் நேரில் ஆய்வு செய்தபோது ஆலையின் உள்ளே பசுமை வளையத்தைக் கொஞ்சம்கூட காண இயலவில்லை. ஆலை ஒரு கான்க்ரீட் காடு போன்று இருந்தது.
மத்திய அரசின் சுற்றுச்சூழல் விதிகளின்படி புகைபோக்கியின் உயரம் 67.83மீட்டர் அல்லது 83.51மீ என்ற இரண்டு உயரங்களில் இருக்க வேண்டும். ஆனால் ஸ்டெர்லைட் ஆலை புகைபோக்கியின் தற்போதைய உயரம் 60.38 மீட்டர்தான் உள்ளது. இது சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்திற்கு எதிரானது. ஸ்டெர்லைட் நிறுவனம் மாதந்தோறும் வழங்கும் நிலத்தடி நீர் மாசு குறித்த அறிக்கையை தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு சமர்ப்பிக்கவில்லை என்றும் மூவர் குழு ஆய்வறிக்கை தெரிவித்தது.
புகைபோக்கியின் உயரம் 83.51 மீட்டர் கொண்டதாக இருக்க வேண்டும். தற்போது 60.38 மீட்டரில் அமைக்கப்பட்டுள்ளது. புகைபோக்கியின் உயரம் அதிகரிக்கப்பட்டிருந்தால், சல்பர் டை ஆக்ஸைடு உள்ளிட்ட வாயுக்கள் நீக்கப்பட்டு தூத்துக்குடி சுற்றுச்சூழலையும் வாழ்வாதாரத்தையும் பாதித்திருக்காது என்றது அகர்வால் குழுவின் ஆய்வறிக்கை. ஆலைக்கு எதிராக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் தெரிவித்த குற்றச்சாட்டுகளை ஆய்வுக்குழு ஒப்புக்கொண்டது. குறிப்பாக, ஸ்டெர்லைட் ஆலையை வேதாந்தா நிறுவனம் சட்டத்திற்கு புறம்பாக இயக்கியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளும் உண்மைதான் என்றார்கள். இருப்பினும், தருண் அகர்வால் குழுவானது, வேதாந்தா நிறுவனத்துடன் சலுகை மனதுடன் நடந்துகொள்ளுமாறு அறிக்கையில் கூறியது.
ஆலைக்கு ஆதரவாக அறிக்கை வழங்கிய முன்னாள் நீதிபதி தருண்அகர்வால் அடுத்த சில நாட்களில் மும்பையில் உள்ள இந்திய அரசின் SAT ( Securities Appellate Tribunal) இல் Presiding Officer பதவியில் 2.5லட்சம் சம்பளத்தோடு 5 வருட காலத்திற்க்கு பணியமர்த்தப்பட்டுள்ளார் என்று ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் விமர்சனம் செய்தனர்.
தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத்தின் தலைவர் நீதிபதி கோயல், உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற நாளிலேயே பசுமைத் தீர்ப்பு ஆயத்தின் தலைவராக மத்திய அரசால் நியமிக்கப்பட்டார். எனவே, மத்திய அரசின் எண்ணத்திற்கு ஏற்பவே தீர்ப்பு வரும் என்பதை ஊகிக்கின்றேன் என்று வைகோ குற்றம்சாட்டினார். தருண் அகர்வால் குழுவின் பரிந்துரையை ஏற்று தலைமை நீதிபதி ஆதர்ஸ்குமார் கோயல், ரகுவேந்திர ரத்தோர், கே.ராமகிருஷ்ணன், இரு சுற்றுச்சூழல் நிபுணர்கள் அடங்கிய தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் ஐவர் குழு 15.12.2018 அன்று ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதி கொடுத்து தீர்ப்பு சொன்னது.
ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்குவதற்கான உரிமத்தை தமிழக மாசுக்கட்டுப்பாடு வாரியம் புதுப்பித்து வழங்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு பிறப்பித்த அரசாணை ரத்து செய்யப்படுகிறது. ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கும்போது மாவட்ட ஆட்சியர் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தரவேண்டும்.
தூத்துக்குடியில் நலத்திட்டங்களை மேற்கொள்ள வேதாந்தா நிறுவனம் 3 ஆண்டுகளில் ரூ.100 கோடி செலவு செய்ய வேண்டும். சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்த சட்டப்பணிகள் ஆணையத்துக்கு இரண்டரைக் கோடி ரூபாய் ஸ்டெர்லைட் ஆலை கொடுக்க வேண்டும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தனது தீர்ப்பில் கூறியது.
ஆனால், 1994, 1998, 2004, 2008, 2010, 2013 என ஒவ்வொரு ஆண்டும் விதிமுறைகள் வகுக்கப்பட்டன, அத்தனை விதிமுறைகளும் அப்பட்டமாக மீறப்பட்டன. 2018ஆம் ஆண்டும் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் விதிமுறைகள் வகுத்துள்ளது. ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் குறித்த விவரங்களை நாள்தோறும் வெளியிட வேண்டும். விபத்து நேர்ந்தால் தடுப்பு நடவடிக்கை குறித்த திட்ட அறிக்கையை வழங்க வேண்டும். நிலத்தடி நீரின் தன்மை குறித்து இணையதளத்தில் தினசரி பதிவேற்ற வேண்டும்.
ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை தினசரி கண்காணிக்க வேண்டும் என்கிற நிபந்தனைகளை ஸ்டெர்லைட் ஆலைக்கு உத்தரவாக தீர்ப்பாயம் பிறப்பித்தது.
ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்திக்காக 10.07.2008 அன்று வழக்கிய உரிமம் 09.07.2013 அன்றோடு காலாவதியாகிவிட்டது. முறையான உரிமம் இன்றி ஆலை இயங்கி ஆபத்தான கழிவுகளை வெளியேற்றியது. உரிமத்தைப் புதுப்பித்து வழங்க தீர்ப்பு உத்தரவிட்டது.
மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளின்படி, ஜிப்சம் பாண்ட் (நிஹ்ஜீsuனீ றிஷீஸீபீ) அமைக்க வேண்டும். அதற்கு அவகாசம் இருக்கிறதே ஏன் அவசரம் என்கிறது தீர்ப்பு.
உப்பாற்றில் கொட்டப்பட்ட தாமிரக் கழிவுகளால் நீரோட்டம் தடைபடுகிறது, வேளாண் நிலங்களும், மன்னார் வளைகுடா கடல்வளமும் பாதிக்கப்படுகிறது என்பது குற்றச்சாட்டு, தடுப்புச் சுவர் கட்டச்சொல்லுங்கள், அது ஆபத்தான கழிவுகள் இல்லை என்றது தீர்ப்பு.
தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை செயல்படுத்தக் கூடாது தற்போதைய நிலையே தொடரலாம் என்று ஆலையைத் திறக்க அனுமதி மறுத்து 19.12.2018இல் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு போட்டது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றது ஸ்டெர்லைட் நிர்வாகம், அந்த வழக்கு அவசர வழக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது, தமிழக அரசும் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்தது. இரண்டு வழக்குகளையும் 08.01.2019 அன்று விசாரித்த உச்சநீதிமன்றம் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவுக்குத் தடை போட்டது. தமிழக அரசின் கோரிக்கையான தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்குத் தடை விதிக்க மறுத்து வழக்கு தொடர்ந்து நடக்கும் என்று உத்தரவு பிறப்பித்தது. வழக்கம்போல தனது ஆக்டோபஸ் கரங்களால் ஆட்சி செய்யத் துடிக்கிறது வேதாந்தா குழுமம்.
ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தின் குற்றச்சாட்டுகள்:
ஒரு நாளைக்கு 1200 டன் உற்பத்தி செய்யும் தாதுப்பொருளை உருக்கிப் பிரித்தெடுக்கும் ஆலைக்குத் தேவையான நிலத்தில் 60%க்குக் குறைவான நிலத்தில்தான் ஸ்டெர்லைட் அமைந்துள்ளது. தன்னிடம் 172.17 ஹெக்டேர் நிலம் இருப்பதாகப் பொய் சொல்லி விரிவாக்கத்திற்கான உரிமத்தை ஸ்டெர்லைட் பெற்றது. ஆனால், அதன் கைவசம் உள்ளது 102.3 ஹெக்டேர் நிலம் மட்டுமே.
நீரி (NEERI) அறிக்கை (2011) மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அறிக்கை (2012), தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அறிக்கை (2017) ஆகியவை ஸ்டெர்லைட்டின் ஜீரோ கழிவு கட்டமைப்பு (ZLD System) தேவைக்குப் பொருத்தமானவை அல்ல என்றும் அரைகுறையாகச் செயல்படுபவை (dysfunctional) என்றும் சொல்லியிருக்கின்றன. கனமழை பெய்யும்போது ஆலை வளாகத்துக்குள் பெய்யும் மழைநீரைச் சேமித்து வைப்பதற்கான நிலம் ஆலையிடம் இல்லை. ஸ்டெர்லைட்டின் கட்டமைப்பின்படி பார்த்தால் ஒரு நாளைக்கு 70 மி.மீ மழை பெய்தால் கூட கழிவுகள் பக்கிள் ஓடை வழியே கடலில்தான் கலக்க வேண்டும்.
தான் இறக்குமதி செய்கின்ற அடர் தாமிர தாது மூலப்பொருளில் (corporate one concentrate) உள்ள புற்றுநோய் ஏற்படுத்தும், நரம்பு மண்டலத்தைத் தாக்கும் நச்சு வேதிப்பொருட்கள் பற்றிய உண்மைத் தகவல்களை ஸ்டெர்லைட் மறைத்துள்ளது. ஸ்டெர்லைட் இறக்குமதி செய்யும் அடர் தாமிர தாது மூலப்பொருளில் ஆர்சனிக், காரீயம், பிஸ்மத், ஆண்டிமணி, யுரேனியம் உள்ளிட்டவை மிக அதிக அளவில் உள்ளன.
NEERI கடந்த 2005ஆம் ஆண்டு வெளியிட்டிருந்த அறிக்கையில் 0.0579% ஆர்செனிக் கழிவுகள் மட்டுமே வெளியேற்றப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் 2009, 2010ஆம் ஆண்டுகளில் அந்த நிறுவனம் இறக்குமதி செய்த தரக்குறைவான `செம்புத் தாது’க்களில் இரண்டு மடங்கு… அதாவது 0.12% ஆர்செனிக் கழிவுகள் இருந்ததாகக் கண்டறியப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் அளிக்கும் தரவுகளை வைத்துப் பார்க்கும்போது, சராசரியாக, ஒரு நாளைக்கு 7.75 டன் அளவுக்கான புற்றுநோய் ஏற்படுத்தும் ஆர்சனிக்கை தூத்துக்குடி சுற்றுச்சூழலில் ஸ்டெர்லைட் வெளியேற்றுவதாக கணக்கிடப்படுகிறது.
ஸ்டெர்லைட்டின் அருகாமையில் உள்ள கிராமங்களில் ஆரோக்கியக் கண்காணிப்பு ஆய்வுகளை 6 மாதத்துக்கு ஒருமுறை 2011 முதல் மேற்கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், இதுவரை ஸ்டெர்லைட் ஆரோக்கியக் கண்காணிப்பு ஆய்வு ஒன்றைக்கூட செய்யவில்லை. மருத்துவ முகாம்கள் நடத்தி, சேகரிக்கப்பட்ட விவரங்களை ஆய்வுத் தகவல்கள் என அரசுக்கு தெரிவிக்கிறது.
திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி 2008ஆம் ஆண்டு நடத்திய ஆய்வில் ஸ்டெர்லைட் ஆலைக்கு அருகாமையில் ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள 25க்கும் மேற்பட்ட கிராமப் பெண்களும், குழந்தைகளும் கடுமையான நோய்த் தாக்குதலுக்கு ஆளானதாக தெரிவித்தார்கள்.
தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் மார்ச் 2018ல் ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றியுள்ள கிராமங்களில் சேகரித்த நிலத்தடி நீர் மாதிரிகள் ஆய்வின்படி அனுமதிக்கத்தக்க அளவைவிட 11 முதல் 55 மடங்கு வரை நரம்பு மண்டலத்தைத் தாக்கும் விஷமான காரீயம் (றீமீணீபீ) கூடுதலாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதிக அளவு காரீயத்தைக் கொண்ட தரமற்ற தாமிர மூலப்பொருளை ஸ்டெர்லைட் இறக்குமதி செய்துள்ளது. காரீயம், புளூரைடு, ஆர்சனிக், சல்பேட்டுகள், கால்சியம் ஆகிய வேதிப்பொருட்கள் நீரில், நிலத்தில் கலந்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலை தொடங்கிய நாளில் இருந்து அனுமதி இன்றி இயங்கிய நாட்கள் :
· 1997 ஏப்ரல் 1-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை (6 நாட்கள்)
· 1999 ஏப்ரல் 1-ந் தேதி முதல் மே 19-ந் தேதி வரை (49 நாட்கள்)
· 1999 டிசம்பர் 1-ந் தேதி முதல் 2005 ஏப்ரல் 18-ந் தேதி வரை (5 ஆண்டுகள், 4 மாதங்கள், 18 நாட்கள்)
· 2006 ஏப்ரல் 1-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை (6 நாட்கள்)
· 2006 அக்டோபர் 1-ந் தேதி முதல் நவம்பர் 11-ந் தேதி வரை (42 நாட்கள்)
· 2007 ஏப்ரல் 1-ந் தேதி முதல் மே 6-ந் தேதி வரை (36 நாட்கள்)
· 2007 அக்டோபர் 1-ந் தேதி முதல் 2009 ஜனவரி 1-ந் தேதி வரை (ஒரு ஆண்டு, 3 மாதங்கள்)
· 2009 ஏப்ரல் 1-ந் தேதி முதல் ஆகஸ்டு 13-ந் தேதி வரை (4 மாதங்கள், 13 நாட்கள்)
· 2010 ஜனவரி 1-ந் தேதி முதல் 2011 ஏப்ரல் வரை (ஒரு ஆண்டு, 4 மாதங்கள்)
மக்களின் உணர்வுகள் சார்ந்து மட்டுமல்ல அறிவியல் பூர்வமாகவும் இதுபோன்ற பல குற்றச்சாட்டுகளை ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் எடுத்து வைத்துள்ளார்கள். தமிழக அரசின் சார்பிலும் பல்வேறு ஆய்வு முடிவுகளும், தரவுகளும் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திலும், உச்சநீதிமன்றத்திலும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. தேர்தல் ஜனநாயகத்தை கட்டிக்காக்கும் நாட்டில் முடிவுகள் என்னவோ மக்கள் மன்றங்களை நோக்கித் தள்ளப்பட்டுவிடுகின்றன.
கப்பிகுளம் ஜெ.பிரபாகர்