ஆயுதம் தரித்த வனக்காவலர்கள் என்பது கள்ளவேட்டை நடக்கும் உலகின் அனைத்து பகுதிகளிலும் பொதுவான விடயம், ஆனால் அரை நூற்றாண்டு காலமாக நடக்கும் ஓர் உள்நாட்டு யுத்தத்தின் ஆபத்திலிருந்து வனவிலங்குகளைக் காக்கவேண்டி, அந்தப் போரில் ஆயுதமேந்திய ஒரு தரப்பாக 20 ஆண்டுகளாகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள் ‘ விருங்கா’ தேசியப் பூங்காவின் வனக்காவலர்கள்.
விருங்கா, மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவின் கிழக்குப் பகுதியில் இருக்கிறது. 1960இல் பெல்ஜியத்திடமிருந்து விடுதலை பெற்றாலும், இடதுசாரிப் போராளியும், விடுதலை பெற்ற காங்கோவின் முதல் பிரதமருமான பாட்ரிஸ் லுமூம்பாவைக் கொலை செய்ததன் வழி இங்கே நவகாலனியத்தைத் தொடங்கி வைத்தனர் முன்னாளைய காலனிய ஆதிக்கவாதிகள். இன்றுவரை இந்த நவகாலனியத்தின் வேட்டைக்காடாக காங்கோ இருக்கிறது.
பிரித்தானிய இயக்குனரான ஆர்லான்டோ வான் ஐன்ஸீடலின் ஆவணப்படம் ‘ விருங்கா’ 2014, துவக்கத்தில் காலனிய காலத்திலிருந்து சமகாலம் வரையிலான காங்கோவின் வரலாற்று நிகழ்வுகள் துண்டுக்காட்சிகளாக நகர்கின்றன, முக்கியமாக லுமூம்பா பாராளுமன்றத்தில் பிரதமராகப் பொறுப்பேற்பதும், அவர் கொல்லப்படுவதற்கு முன்பாக ராணுவத்தின் பிடியில் இருப்பதுமான காட்சிகள் கடந்து போகின்றன. 2012ஆம் ஆண்டில் கள்ளவேட்டைக்காரர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட கசேரீகா என்கிற வனக்காவலர் ஒருவரின் இறுதி ஊர்வலத்திலிருந்து சமகாலத்தில் படம் துவங்குகிறது. இதுவரையில் 175 வனக்காவலர்கள் அங்கே கொல்லப்பட்டிருப்பது செய்தி.
பூங்காவின் மையமாக இருக்கும் எட்வர்ட் ஏரிக்கு அடியில் இருக்கும் கச்சா எண்ணெய்க்காக அங்கே முகாமிட்டிருக்கும் ‘சோகோ’ (SOCO) என்கிற பிரித்தானிய நிறுவனம், இந்நிறுவனத்திற்காக பூங்காவைக் கையளிக்கத் துடிக்கும் அரசும் ராணுவமும், பூங்காவைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதன் வழி எண்ணெய் நிறுவனத்திடம் பணபேரம் நடத்த அந்தக் காடுகளில் அலைந்துகொண்டிருக்கும் ‘எம்23’ என்கிற போராளிக் குழு, இந்த மூன்று தரப்பிற்கும் மத்தியில் சிலநூறு எண்ணிக்கையில் அழிவின் விளிம்பில் ஊசாலாடிக் கொண்டிருக்கும் அந்த மழைக்காடுகளின் ஓரிட வாழ்வியான ‘மலை கொரில்லாக்கள்’, நாலாவதாக, இந்தப் பூங்காவையும் கொரில்லாக்களையும் காக்கும் போராட்டத்தில் வேறு வழியேதுமின்றி ஆயுதமேந்தி ஒரு கெரில்லாக் குழுவின் ஒழுங்கோடு அங்கே காவல் புரியும் வனக்காவலர்கள் என்பதாக அந்தப் பூங்காவின் வரலாற்றில் ஒரு கொந்தளிப்பான காலகட்டத்தை இப்படம் பதிவு செய்திருக்கிறது.
விருங்காவின் மையத்தில் அநாதைகளாக்கப்பட்ட கொரில்லாக்களுக்கான காப்பிடம் ஒன்றும் இருக்கிறது. ஆந்த்ரே பாவ்மா, பெற்றோரை இழந்த மலை கொரில்லாக்களின் பராமரிப்பாளர். மைஷா, கபோகோ, நேஷே, நகாஷி போன்ற்வை அங்கிருக்கும் நான்கு கொரில்லாக்கள். ஒரு கட்டத்தில் எம்23 ஆயுதக்குழு பூங்காவை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விடுகிறது. அந்தப் போராட்ட நாட்களில், துப்பாக்கிச் சத்தமும், ஷெல்கள் விழுந்து வெடிக்கும் அதிர்வுகளும் இந்த கொரில்லாக்களை அச்சுறுத்துகின்றன. கொரில்லாக்கள் ஒன்றையொன்று கட்டியணைத்தபடி கிடக்கின்றன. உணவுப்பொருட்கள் தீர்ந்துகொண்டிருக்கிறது, அங்கிருந்து வெளியேறும் வழியும் அடைபட்டுப் போய்விடுகிற நாளொன்றில் இடைவிடாத வயிற்றுப்போக்கோடு இரவுமுழுவதும் போராடிய கபோகோ அதிகாலையில் மரணித்துப் போகிறது.
உள்ளூர் மக்களோடும் வனக்காவலர்களோடும் இணைந்து இந்த பூங்காவைப் பாதுகாக்கும் மற்றொருவர் அதன் இயக்குநரான இமானுயேல் டி மெரோடி, பெல்ஜிய அரச குடும்பத்தில் பிறந்து ஆப்பிரிக்காவில் வாழ்ந்து வருபவர். தனது வாழ்க்கையை விருங்கா பூங்காவின் பாதுகாப்புக்கென அர்ப்பணித்துக்கொண்டவர், இப்படம் நிறைவடைந்த பின்னாட்களில் அவர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் சாவின் விளிம்பைத் தொட்டு மீண்டவர்.
சோகோ எண்ணெய் நிறுவனத்தின் நடவடிக்கைகளை இந்தப் போராட்டகாலத்தில் புலனாய்வு செய்யவந்தவர் மெலனி கூபி என்ற பிரெஞ்சு பெண் பத்திரிக்கையாளர், அவர் சோகோ எண்ணெய் நிறுவனத்தின் அதிகாரி ஒருவரோடு தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதோடு அதன்வழி எண்ணெய் நிறுவனம், அரசு மற்றும் எம் 23 போராளிக்குழுக்களுக்கிடையில் நடந்த இரகசிய பேரங்களை வெளிக்கொண்டு வந்ததும் இப்படத்தில் இடம்பெற்றுள்ளது.
உலகெங்கிலும் உள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் கொடுத்த சர்வதேச நெருக்கடிகள் சோகோ நிறுவனத்தை காங்கோ அரசு வெளியேற்றும்படியான கட்டாயத்தைக் கொண்டுவந்திருந்தாலும். இன்னும் அது விருங்காவின் மலைக்காடுகளைச் சுற்றியே வருகிறது. பழைய போராட்டச் சூழல் எப்போது வேண்டுமானாலும் வரும் நிலையே அங்கு உள்ளது.
லிங்கராஜா வெங்கடேஷ்