இயற்கையின் கொடை என்பது அளப்பறியது. இயற்கையின் ஒரு சிறு புள்ளிதான் மனிதன். ஆனால் மிக உன்னத நிலையை அடையும் பேற்றையும் பிறருக்கு கற்றுக் கொடுக்கும் வலிமையும் அறிவும் பெற்றவனாகி சிவத்திற்கு ஒப்பாகவே கூறப்படுகிறான்.
இத்தகைய மனிதன் இயற்கையோடு இணைந்து வாழப் பழகிக்கொள்ளும் வரையில் தான் இத்தகைய மேன்மைகளை அடையமுடியும். இதற்கான வழிமுறைகள் அனைத்தையும் கற்றுக்கொடுப்பதே ‘சித்த மருத்துவம்”. சித்த மருத்துவம் பாரதத்திற்கு மட்டுமே சொந்தமானது எனினும் சித்தர்களின் ஞானமும், அறிவும் அவர்களின் பல தரப்பட்ட ஆய்வுகளின் அறிவியல் முடிவே சித்த மருத்துவம் என்பதால் சித்தர்களை முன்னிலைப்படுத்தி பெருமைப்படுத்தும் விதமாக ‘சித்த மருத்துவம்” என்பதாயிற்று.
மருத்துவம் என்பதற்கு சித்தர்கள் வகுத்த இலக்கணம் நான்கு. இவற்றுள் மூன்று ஒவ்வொரு தனிமனிதனும் கடைபிடிக்க வேண்டிய வாழ்க்கை நெறிமுறையும், ஸ்தூல உடலையும், அவனுள் இயங்கும் சூட்சும உடலையும் வளமை உடையதாக்கும் பல முறைகளும் அடங்கும். மருத்துவ இலக்கணத்தின் இறுதிப் பங்கே மருத்துவனைச் சாரும். மனித உடலின் இயங்கியலைப் படம்பிடித்து, அதன் அடிப்படையிலேயே நோய்களை வகுத்து அதன் காரணிகளைத் தொகுத்து அவற்றை நீங்கும் மருந்து முறைகளைக் கொடுத்துள்ளனர். இம்மருத்துவ முறைகட்கு அடிப்படையாக இருப்பது பூமியே. பூமி என்பதில், மலை, மண், கடல் என இயற்கையில் தோன்றும் கனிமங்களே! இதில் தாவரம் தனக்குத் தேவையான சத்துக்களையும், மருத்துவ தாதுக்களையும் பிரித்து தனக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்ளும் வன்மை பெற்றவை. அதனால் தான் மூலிகைகளை முதன்மை மருந்தாகவும், இவற்றால் பாதுகாக்க இயலாத நிலையில் தாதுக்களைக்கொண்டு மருத்துவம் செய்யக் கூறியுள்ளனர். இவற்றை உடலில் வினைபுரியத்தக்க வகையில் மாற்றியமைக்கும் இரசாயன முறை என்பது உலகெங்கிலும் காணமுடியாத, ஒப்புமை இல்லாத ஒரு இரசாயன முறை.
காலப்போக்கில் நவீன மருத்துவத்தின் தாக்கம் சித்த மருத்துவத்தின் பயன்பாட்டை புரட்டிப்போட்டதின் விளைவு நோய்க்கூட்டம் பல்கிப் பெருகிவிட்டது. ‘உடம்பாரழியின் உயிராரழிவர்” என்பதும் அதனால் ‘நோய்க்கிடங்கொடேல்” என்பதும் தான் சித்த மருத்துவத்தின் அடிப்படைக் கோட்பாடுகள். சித்த மருத்துவ கோட்பாடுகள் யாவும் ஒவ்வொரு மனிதனையும் சென்றடைய வேண்டும். நோயற்ற சமுதாயம் படைக்க வேண்டும் என்பதே என் கட்டுரையின் நோக்கம்.
தொடரும்…
Leave a Reply