பாலைவனமாகும் பள்ளிக்கரணை – சங்கர், ஒளிப்படக்கலைஞர்

‘‘அழிப்பவர்களைக் காட்டிலும் அக்கிரமக்காரர்கள், வாய்மூடி வேடிக்கை பார்ப்பவர்களே…’’ – புரட்சி என்கிற நான்கெழுத்து வார்த்தையின் நடமாடும் உருவமாக இருந்த லெனின் வரிகள் இவை. பள்ளிக்கரணை என்கிற உயிர்ப்பன்மய சூழல் பொக்கிஷம் ஒன்று, கண் முன்னே அழிந்து, குப்பை மேடாகிக் கொண்டிருக்கும் வேளையில், வாய்மூடி மவுனியாக நகர்ந்து கொண்டிருக்கிற நாமெல்லாம்… அக்கிரமக்காரர்களன்றி… வேறென்ன?

‘கல் தோன்றி… மண் தோன்றா…’ தமிழகத்தின் தலைநகர் சென்னைக்கு தென்பகுதியில் இருக்கிறது பள்ளிக்கரணை. 6 ஆயிரத்து 600 ஹெக்டேர் பரப்பளவில் பரந்து, விரிந்து கிடந்த சதுப்பு நிலமொன்று இங்கு இருந்தது. 1965ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி இந்த சதுப்பு நிலம் பல்லுயிர் பெருக்கத்தின் உயிர்நிலமாகவும், வாழ்விடமாகவும் இயற்கை சூழல் சமநிலைக்கு மாபெரும் தொண்டாற்றியிருக்கிறது.

பூமிப்பந்தின் ஆரோக்கியத்தை பேணிப் பாதுகாக்கும் பணியில் ஆறுகளுக்கும், ஏரிகளுக்கும், கடல்களுக்கும் எத்தனை முக்கியப் பங்குண்டோ, அதற்கு கொஞ்சமும் சளைத்திராத அளவுக்கு சதுப்பு நிலங்களுக்கும் பங்குண்டு. ஆறுகள், ஏரிகளின் உபரிநீர் நீண்டகாலம் தொடர்ச்சியாக வெளியேறும் பகுதியில் சதுப்பு நிலம் உருவாகிறது.

இவை மூன்று மீட்டருக்கு குறைவான ஆழம் கொண்டவை. கனிம வளங்கள் மிகுந்தவை. கிணறுகள் எல்லாம் வற்றி்ப் போன இன்றைய காலத்தில், ஒரு குடம் தண்ணீருக்காக பல கிலோ மீட்டர் தொலைவுக்கு அலைந்து கொண்டிருக்கிறோம். நிலத்தடி நீரை சேமிப்பதில் சதுப்பு நிலத்தின் பங்கு தெரிந்தால்… ஆச்சர்யப்பட்டுப் போவோம்.

சதுப்பு நிலங்கள், தங்களது பரப்பளவை போல பத்து மடங்கு பரப்பளவு கொண்ட பகுதிகளின் நிலத்தடி நீர் வற்றாமல் பாதுகாக்கிறது… தெரியுமா?
– – – – –

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் பறவைகள், மீன்கள், தாவரங்கள் என 137 வகை உயிரினங்கள் வசிக்கின்றன. தினமும் நாம் கடந்து போகிற இந்த சிறு நிலப்பரப்பில் மட்டும் 120 பறவையினங்கள், 114 தாவர வகையினங்கள், 21 ஊர்வன, 47 வகை மீன்கள், 10 வகை பாலூட்டிகள், 10 வகையான நீர் நில வாழ் உயிரனங்கள் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கின்றன… என்றால், மெய்யாகவே வியப்பு மேலிடுகிறது இல்லையா?

இத்தனை உயிரினங்களின் தாய்வீடாக இருக்கிற பள்ளிக்கரைண, மனித இனத்தை மட்டும் மறந்து ஒதுக்கி விடுமா என்ன? தன்னைச் சுற்றியிருக்கிற 50 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவுக்கு நிலத்தடி நீரை பாதுகாத்து வந்தது. அப்படிப்பட்ட தாய் நிலத்தை, கடந்த, 30 ஆண்டுகளில் பத்தில் ஒரு பங்கு கூட விட்டு வைக்காமல் வெறிக்கொண்டு அழித்து விட்டோம்.

சதுப்பு நிலத்தை பிளந்து செல்லும் சாலைகள். நிலம் எங்கும் நிரம்பிக் கிடக்கும் சாக்கடை, கான்க்ரிட் கட்டிடங்கள்… என நம் கண் முன்னே அந்தத் தாய்பூமி அழிந்து கொண்டிருப்பதை கண்டும், காணாமலும் கடந்து சென்று கொண்டிருக்கிறோம்.

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு தண்ணீர் கொடுத்த ஏராளமான மதகுகளைக் காணவில்லை. சென்னை மாநகராட்சியோ மலை போல் குப்பையை கொட்டி தீ வைக்கிறது, தனியார் நிறுவனங்களின் கழிவு சேமிக்கும் கிடங்காக மாறிவிட்டது. சுற்றுச்சூழலை செய்து பாதுகாக்கும் தேசிய கடல் களர் தொழில்நுட்ப கழகக் ஆக்கிரமிப்பும் இதில் அடங்கும் என்பதுதான் வேதனை!
– – – –

2011 ஆண்டு மார்ச் 19ம் தேதி சமூக விரோதிகளால் 15 இடங்களில் தீ வைக்கப்பட்டு 10 ஏக்கர் பரப்பளவு எரித்து சாம்பலாக்கப்பட்டது. அன்னையின் மடியில் படுத்துக் கிடக்கிற பாதுகாப்புடன் அங்கிருந்த பல ஆயிரம் உயிரினங்களும் அந்த நெருப்பில் கருகி சாம்பலாகின. நெருப்பின் கங்கு இன்னும் அணைந்து விடவில்லை. அது உள்ளுக்குள் தொடர்ந்து எரிந்து கொண்டேதான் இருக்கிறது. அந்த சதுப்புநிலத்தை முற்றிலுமாக சாம்பாக்கி விடவேண்டும் என்கிற வெறிகொண்டு…. இன்னும் உக்கிரமாக எரிந்து கொண்டிருக்கிறது.

வழக்கம் போல நாம், செயலற்றுக் கடக்கிறோம்.
‘அழிப்பவர்களைக் காட்டிலும் அக்கிரமக்காரர்கள்…. வாய்மூடி வேடிக்கை பார்ப்பவர்களே…’’ என அந்த ரஷ்யப் புரட்சியாளன் சொன்ன வரிகள் தான் மீ்ண்டும் நினைவுக்கு வந்து நெஞ்சுக்குள் தீமூட்டுகிறது!

Related Posts

Leave a Reply