எச்சரிக்கை மணி ஒலித்த முதல் பெண்
பூச்சிக்கொல்லி மருந்துகள் சுற்றுச்சூழலை நாசப்படுத்துவதைப் பற்றி, உலகுக்கு முதன்முதலில் உணர்த்தியவர் ரேச்சல் கார்சன் (1907-1964). “20 ஆம் நூற்றாண்டில் தாக்கம் செலுத்திய 100 முக்கிய ஆளுமைகளி”ல் ஒருவராக ரேச்சல் கார்சனை டைம் பத்திரிகை தேர்ந்தெடுத்திருக்கிறது.
அவருடைய தோழி ஓல்கா ஓவன்ஸ், ரேச்சலுக்கு 1958-ல் எழுதியிருந்த கடிதத்தில் தனது ஊரில் வசந்தம் காணாமல் போய், நிலம் வளம் குன்றிப் போனது பற்றி வருத்தத்துடன் குறிப்பிட்டிருந்தார். இந்தப் பிரச்சினை தொடர்பாக நீண்டகாலமாக சிந்தித்து வந்த ரேச்சலின் கவனத்தை, அது திசைதிருப்பியது. இது குறித்து ஆராய்ச்சி செய்ய வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தார்.
அமெரிக்க அரசின் காட்டுயிர் துறையில் பணியாற்றிக் கொண்டிருந்த ரேச்சல், 1952இல் அரசுப் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார். அடுத்த 10 ஆண்டுகளில் நடத்திய ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, 1962-ல் அவர் எழுதிய மௌன வசந்தம் (Silent Spring) நூல் வெளியானது.
பெரும் சர்ச்சைகளைச் சந்தித்த அந்தப் புத்தகம், அறிவியல் ஆதாரங்களை வலுவாகக் கொண்டிருந்ததால் உலகப் புகழ்பெற்றதாக மாறியது. வெளியாகி ஒன்றரை ஆண்டுகளுக்குள் 10 லட்சம் பிரதிகள் விற்றன. அற்புதமான எழுத்துத் திறமையை ரேச்சல் பெற்றிருந்தார்.
பூச்சிக்கொல்லிகளின் தீமைகளைப் பற்றி முதன்முதலில் ஆதாரத்துடன் அவர் பேசியிருந்தார். ஒன்றையொன்று சார்ந்து வாழும் நமது பூமிப் பந்தில் வேதிப் பொருள்கள் எப்படி நிலம், நீர், காற்றை மாசுபடுத்தி, பின்விளைவுகளை உருவாக்குகின்றன என்று அவருடைய நூல் விளக்கியது.
டி.டி.டி. பூச்சிக்கொல்லி ஏற்படுத்திய பாதிப்பால், அமெரிக்காவின் தேசியப் பறவையான மொட்டைக் கழுகுகள் இனப்பெருக்கம் செய்ய முடியாமல் அழிவது தெரியவந்தது. பூச்சிக்கொல்லிகளால் அவற்றின் முட்டை ஓடு வலுவிழந்து, முட்டை உடைந்துபோவதே இதற்குக் காரணம் என்று சுட்டிக்காட்டியிருந்தார்.
கடந்த நூற்றாண்டில் மிகப் பெரிய தாக்கம் செலுத்திய 100 முக்கிய புத்தகங்களில் இது இடம்பிடித்தது. சர்வதேச அளவில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு இயக்கம் தோன்றக் காரணமாக அந்த நூல் மாறியது.
மௌன வசந்தம் புத்தகத்தை எழுதிக்கொண்டிருந்த காலத்திலேயே ரேச்சலுக்குப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. அந்தப் புத்தக வெளியீட்டுக்கு முன், அவர் கடுமையாக உடல்நலம் குன்றியிருந்தார். 1964இல் (57 வயதில்) அவர் மரித்துவிட்டார்.
- வள்ளி
ரேச்சல் கார்சன் பிறந்த நாள்- மே 27
Leave a Reply